கவர்னர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று 11.30 மணிக்கு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, கவர்னரிடம் விளக்கமாக தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சுவாச சிகிச்சை நிபுணர், இதய சிகிச்சை நிபுணர், நோய் தொற்று சிகிச்சை நிபுணர் ஆகியோர் சிகிச்சை அளிப்பது குறித்து கவர்னரிடம், டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்தார்.
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அவர் தற்போது நன்றாக பேசுவதாகவும் கவர்னரிடம் அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்று பார்த்தார். முதலமைச்சர் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பான சிகிச்சைகளுக்காக டாக்டர்களுக்கு கவர்னர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற கவர்னரை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் ராமமோகன ராவ், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com