பிரதமர் முன்னிலையில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு !

நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டு கேட்கப்படுவதாக பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

pm-modiதில்லியில் உள்ள விஞ்யான் பவனில் திங்களன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா கொண்டாட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாகூர், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர் .

arvind-kejriwalஇந்த நிகழ்வில் கலந்து கொண்ட கெஜ்ரிவால் பேசும் பொழுது, ‘தங்களுடைய  தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் உள்ளனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகிறது எனும் செய்தி உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்க வேண்டிய  ஒரு செயலாகும்.

இந்த செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமன்றி நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலுமாகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு வழங்கியுள்ள பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இத்தகைய மோதல் போக்கை கடைபிடிப்பது உகந்தது அல்ல. நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும்’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக கெஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறேன். நீதிபதிகள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான வழிமுறைகள்  ஆராயப்பட்டு வருகிறது’ என்று கூறினார். பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அர்விந்த் கெஜ்ரிவால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

-கே.பி.சுகுமார்.