கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மத்திய பாஜக அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்துள்ளது. இந்த முயற்சியை 1978-ல் அரசு மேற்கொண்டது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.
தற்போது ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். அதனை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருந்துகள், பால், பேருந்து டிக்கெட் வாங்க முடியவில்லை. மக்கள் கையில் இருப்பது 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். அதை முடக்கிவிட்டு மக்களுக்குத் துன்பம் ஏற்படாது என்று சொல்வது வேடிக்கை.
ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிப்பது குறித்து 2012-ம் ஆண்டு மத்திய அரசின் நேர்முக வரி வாரியம் ஆராய்ந்தது.
அதில், கிடைக்கக்கூடிய பயனைவிட, மக்களுக்கு ஏற்படக்கூடிய துன்பம் அதிகம் என்றும், அதனைச் செயல்படுத்த வேண்டாம் என்றும் அறிக்கை தந்தது.
இதை மறந்து விட்டு இந்த முயற்சியை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இது மக்களுக்குத் துன்பத்தைத்தான் ஏற்படுத்தும்.
இந்தியாவில் ரூ.17 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் வெறும் 400 கோடிதான் கள்ள நோட்டுகள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதைத் தடுப்பதற்காக இவ்வளவு பெரிய நடவடிக்கை தேவையில்லை.
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தில்லியில் ராகுல்காந்தி வரிசையில் நின்றதை பாஜக விமர்சனம் செய்துள்ளது. அப்படி என்றால் மத்திய அமைச்சர்கள் தங்களுடைய செலவுக்கு எப்படிப் பணத்தை மாற்றுகின்றனர்? அவர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே பணத்தை மாற்றுகின்றனரா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
-கே.பி.சுகுமார்.