கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் மத்திய அரசு அதிரடியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை வாபஸ் பெறப்பட்டதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில், சங்கம்லால் பாண்டே மற்றும் விவேக் நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது மனுவில் கூறியிருந்தனர்.
இதனையடுத்து, தங்களின் கருத்தை கேட்காமல், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க கூடாது என மத்திய அரசு அபிடவிட் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் வழக்கறிஞர் கூறுகையில், இதுவரை இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.11லட்சம் கோடி டெபாசிட் ஆகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும், இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. பாதிப்பிலிருந்து மக்கள் மீள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி நவம்பர் 18-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com