இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள், பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து, இந்த தாக்குதல் குறித்து, கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாக் நீரிணைப் பகுதியில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும், இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து, தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
நாகை மாவட்டத்திற்கு அப்பால் தமிழக மீனவர்கள் அமைதியான முறையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் குண்டு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளுக்குப் பின்னரும், இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும், தமிழக மற்றும் இலங்கை மீனவர்களிடையே அமைதியான முறையில் மீன்பிடிப்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்திருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும்.
மீனவர்கள் சந்திப்புக்குப் பின்னர், கடந்த 5-ம் தேதி இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மீனவர்களை கையாள்வதில் இருநாட்டு கடற்படையினராலோ, கடலோர பாதுகாப்புப் படையினராலோ எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படக்கூடாது என இருநாட்டு அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டுக்குப் பின்னரும், அப்பாவித் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரை நேரில் வரவழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமரை, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, தமிழக மீனவர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மத்திய அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லையை முடிந்துபோன விவகாரமாக கருதக்கூடாது என்ற தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1974-ம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது அரசியல் சாசனப்படி செல்லாது என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அதிர்ச்சி தரும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவுத் துறை அதிகாரிகள் மூலமாக, இந்த சம்பவம் குறித்து தான் அறிந்ததாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோதி உறுதி அளித்துள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com