குஜராத்தில் காலியாக இருந்த 123 உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை பாஜகவுக்கு பாதகமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.
தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்களே முன்னிலை வகித்தனர். இரு மாநகராட்சிகள், 1 மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்றிய பாஜக, மொத்தம் 107 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்கிய காங்கிரஸ் கட்சி வெறும் 16 இடங்களை மட்டுமே வென்றது. வாபி மற்றும் கணக்பூர் – கன்சாட் நகராட்சிகளில் ஓரிரு இடங்களைத் தவிர அனைத்து வார்டுகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குஜராத் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானி, “பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், கருப்புப் பணத்துக்கும் எதிராக பிரதமர் மோதி முன்னெடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் இந்த வெற்றி‘ என்று கூறியுள்ளார். முன்னதாக, திங்கள்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்ட மகாராஷ்டிர நகராட்சித் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-எஸ்.சதிஸ் சர்மா.