ஆரம்பப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாகத் திகழும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று துபாயில் இடம்பெற்றது. மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு 6 நாடுகள் பங்கேற்றன.
மலேசியாவின் சார்பில் கெடா, கூலிம் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ராகவி ராஜேந்திரன், பேரா, சுங்கைசிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையைச் சேர்ந்த சிவபூரணம் சிவகுமார், மற்றும் ஜொகூர், ஹாஜி மானான் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஷஸ்மிதா சுப்ரமணியம் ஆகிய மூவரும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
மலேசியாவின் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ நிறுவனமும் இணைந்து இந்த அனைத்துலக மாணவர் முழக்கம் போட்டி யை நடத்தியது.
இதில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில் இந்தியா, மலேசியா ஆகியவை முதல் இரு இடங்களைக் கைப்பற்றியது. மலேசியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவப் பேச்சாளர்கள் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவின் ரமணா கோவிந்தராஜ் முதலிடத்தைக் கைப்பற்றி வெற்றியாளராக வாகை சூடியதோடு 3,000 ரிங்கிட் பரிசுத்தொகையும் சான்றிதழும் பெற்றார்.
அடுத்து இரண்டாவது இடத்தை மலேசியாவின் கூலிம் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ராகவி ராஜேந்திரன் வென்றார். அவர் 2,500 ரிங்கிட் பரிசுத்தொ கையும் சான்றிதழும் பெற்றார்.
மூன்றாவது இடத்தை மலேசியாவின் ஜொகூர், ஹாஜி மானான் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஷஸ்மிதா சுப்ரமணியமும் சிங்கப்பூரின் ஹரிஷிகா இளங்கோவன் ஆகியோரும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். இவர்கள் தலா 2,000 ரிங்கிட் பரிசுத் தொகையையும் சான்றி தழையும் பெற்றனர்.
-ஆர்.மார்ஷல்.