சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நீர்வள ஆதாரத்தைப் பெருக்குவது மிகவும் முதன்மையான பணி. இதன் மூலம் நீர் ஆதாரங்களைப் பராமரித்து, நீரை முறையாக சேமித்து வைத்தால், கடும் வறட்சியையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.
நீர் ஆதாரங்களை மக்கள் பங்களிப்புடன் பாதுகாத்து வந்த முறைதான் குடிமராமத்து முறை. இந்த முறை காலப்போக்கில் மறைந்து, அரசே இந்தப் பணிகளைச் செய்ய நேரிட்டது.
இதனால் இந்த நீர் ஆதாரங்களின் பராமரிப்பில், மக்களின் ஈடுபாடு குறைந்து விட்டது. அதனையடுத்துதான் குடிமராமத்து திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், பாசன அமைப்புகள் 10 சதவீத பங்களிப்பினை, பொருளாகவோ அல்லது மனித ஆற்றலாகவோ வழங்க முன் வந்தால், ரூ.10 லட்சம் வரையான திட்டப்பணிகளுக்கு, நிதி உதவி வழங்கி, அவர்களே அப்பணியைச் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
ஆறுகளைச் சுத்தம் செய்தல், குளங்களைச் சீரமைத்தல், கால்வாய்களைச் சீரமைத்தல் போன்ற பல்வேறு நீர்நிலைகளை இந்தத் திட்டத்தின் மூலம் சீரமைக்கலாம். இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பொதுமக்களும், அமைப்புகளும், மாவட்ட ஆட்சியரை அணுகி, இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம்.
இந்த ஆண்டு ரூ.100 கோடி இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தி, பொதுமக்களும், மாவட்ட ஆட்சியரை அணுகி தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
திட்டப் பணிகள் அனைத்தும் 2017 மார்ச் மாதம் இறுதிக்குள் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதி அடுத்த ஆண்டு ரூ.300 கோடியாக உயர்த்தப்படும். அது படிப்படியாக மேலும் உயர்த்தப்பட்டு, அடுத்த ஓரிரு ஆண்டுகளில், நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகள், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகச் செயல்படுத்தப்படும்.
-கே.பி.சுகுமார்.