திருச்சிராப்பள்ளி கலை காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குநர் அருட்தந்தை சகாயராஜா இன்று (21.02.2017) சாலை விபத்தில் மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த இரண்டு பேர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி – சென்னை திருமாந்துறை புறவழிசாலையில் எறையூர் சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான லாரி டீசல் போட தொழுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அச்சமயம் திருச்சியிலிருந்து – சென்னை நோக்கி அதிவேகமாக வந்த ஒரு கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில், அந்த காரில் பயணம் செய்த திருச்சிராப்பள்ளி கலை காவிரி நுண்கலைக் கல்லூரி இயக்குநர் அருட்தந்தை சகாயராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த சர்வைட் சபையின் அருட்சகோதரி மீராவும், அந்த காரின் ஓட்டுனரும் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-ஆர்.அருண்கேசவன்.