ஹைட்ரோ கார்பன் பிரச்சனை!- போராட்டக் களத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்!

g.k.vasan

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் பிரச்சனை சம்பந்தமாக போராடி வரும் மக்களை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்:

தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

ஹைட்ரோகார்பன் என்பது நீரகக்கரிமம், அதாவது ஹட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த ஒரு கனிம கலவையாகும். இந்த ஹைட்ரோகார்பன்களில் ஆல்கேன் (alkanes), ஆல்கீன் (alkenes), ஆல்கைன் (alkenes), சைக்ளோ ஆல்கைன் (cycloalkanes) என 14 வகைகள் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் மீத்தேன் வகை வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டவற்றில் ஆல்கேன் என்பது ஒற்றை பிணைப்பு வகையாகும். இதன் சூத்திரம் CnH2n+2 . நாம் குறிப்பிடும் மீத்தேன் இவ்வகையை சார்ந்தது தான். இதன் கெமிக்கல் பார்முலா CH4 ஆகும். இது குரூட் ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் சாண எரிவாயுவில் காணப்படும். இதற்கு சதுப்பு நில வாயு என்ற பெயரும் உண்டு.

எரியும் பொழுது மீதமின்றி முழுதாக எரிந்துவிடும் தன்மையும் இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது பார்ப்பதற்கு ‘திடீர்’ என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால் இதனைக் ‘கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைப்பது உண்டு.

பூமியில் துளையிட்டு இந்த வாயுவை எடுத்த பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தில்  அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாறைகள் எலாஸ்டிக் போல் வந்து நிரப்பிக் கொள்ளும், அத்துடன் அருகிலுள்ள நிலத்தடி நீரும் அங்கு நிரப்பிக் கொள்ளும். இவை போதாதென்று பூமியின் மேற்பரப்பிலுள்ள நீரும் சிறிதளவு கீழே செல்ல வாய்ப்பு மிக அதிகம்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், மண்வளம் குறையும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும், குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்படும். அதனால்தான் இத்திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டும்தான், இந்த ஆபத்தான பிரச்சனையில் இருந்து நம் மண்ணையும், நம் மக்களையும் காப்பாற்ற முடியும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com