தேர்தல் ஆணையத்தின் ஆவணத் தகவலின்படி, டி.டி.வி. தினகரன் அதிமுகவின் நிர்வாகியாக இல்லை; அவர் அனுப்பியுள்ள பதிலை ஏற்க முடியாது!- சசிகலாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம்.  

sasi ttvdECI LRஅதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்த நடவடிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் அளித்த புகார் மனுவுக்கு, சசிகலா சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் அனுப்பியுள்ள பதிலை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் மார்ச் 10-ஆம் தேதிக்குள் பதில் தருமாறு சசிகலாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையச் செயலாளர் பிரமோத் குமார் சின்ஹா மார்ச் 03 ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில்,

கடந்த பிப்ரவரி 02,15,17 ஆகிய தேதிகளில் உங்கள் பெயருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதங்களுக்கு டி.டி.வி. தினகரன் பெயரில் கடந்த பிப்ரவரி 20, 28 ஆகிய தேதியிட்ட ஐந்து வெவ்வேறு கடிதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன.

தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி ஆவணத் தகவலின்படி, அதிமுகவின் நிர்வாகியாக டி.டி.வி. தினகரன் இல்லை. இந்நிலையில், தேர்தல் ஆணையத்துடன் மேற்கொள்ளப்படும் கடிதத்தில் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிதான் கையெழுத்திட முடியும்.

எனவேஉங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்துக்கு உங்கள் கையொப்பமிட்ட பதிலையோ அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட யாரேனும் உங்கள் சார்பில் பதில் அளிக்க வேண்டும். இந்தப் பதிலை மார்ச் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் நகல்கள், அதிமுக கட்சித் தலைமையகம், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ள மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயனுக்கு அவரது வழக்குரைஞர்கள் கே.கிருஷ்ணா, டி.அர்ச்சனா பெயரிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com