கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா!- அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

kattcha thevukattcha thevu A

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல்.

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழாவினை முன்னிட்டு, யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில், கழிப்பறை கூடங்கள் மற்றும் தங்குமிட தற்காலிக கொட்டகைகள், போக்குவரத்துக்கள், படகுச் சேவைகள் குறித்தும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். சுற்றுலா அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தற்காலிக மல,சல கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மார்ச் 11 ஆம் தேதி அதிகாலை 5 மணி முதல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரைக்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையினால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 11 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் கடற்படை மற்றும் தனியார் படகுச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படகுகளில் பயணிப்போர் கட்டாயம் உயிர்காப்பு அங்கி அணிவதற்கும் வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். தனியார் படகுகளிலும், உயிர்காப்பு அங்கிகளை பயன்படுத்துமாறும், கட்டாயம் உயிர்காப்பு அங்கிகள் ஒவ்வொரு படகுகளிலும் இருக்க வேண்டுமென்றும் அரசாங்க அதிபர் படகு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிகட்டுவானில் இருந்து ஒருவழிப் பயணமாக 275 ரூபா கட்டணம் அறவிடப்படுமென்றும், படகுகளில் பயணிக்கும் போது, அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், நடவடிக்கை எடுப்பதற்கு கடற்படையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், படகுகள் அனைத்தும் கடற்படையினரின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுமென்றும் கூறினார்.

அத்துடன், தண்ணீர் வசதிகள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள், குற்றச்செயல்கள் நடைபெற்றால், கண்காணிப்பதற்கு 200-ற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள், குடிவரவு திணைக்களம் அதிகாரிகள் என பலரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் அனைத்து வசதிகளும் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளதென்றும், பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தமது உடமைகளின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கச்சத் தீவில் சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய நமது தமிழ்நாட்டு மக்கள், வழக்கம் போலவே அகதிகளாக சென்று வர வேண்டிய அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

-என்.வசந்த ராகவன்.