வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். சிங்களப்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர். அதைத்தொடர்ந்து அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற 21 வயது மீனவரின் கழுத்தில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். ஜெரோன் என்ற மீனவர் இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். சிங்களப்படையினரின் வெறிச்செயலால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், தாக்கிக் காயப்படுத்துவதும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சிங்களப்படையினரின் தாக்குதலில் இதுவரை சுமார் 800 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், உலக அளவில் உருவாக்கப்பட்ட மனித உரிமை சார்ந்த சட்டங்கள் காரணமாகவும் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது சற்று குறைந்திருந்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவரும், மார்ச் மாதம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிறிஸ்டி என்ற மீனவரும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சி விலகும் முன்பே 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய இரு மீனவர்களை சிங்களப்படை கொலை செய்தது. அவர்களில் ஜெயக்குமாரை கடலில் வீசி கயிறு கட்டி பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்று கொலை செய்திருக்கின்றனர்.
2011-ஆண்டு மே மாதம் உலகக்கோப்பைப் போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல் 5 மீனவர்களை சிங்களப்படை சித்திரவதை செய்து கொலை செய்தது. அந்த நேரத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதுகுறித்த உண்மைகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த 6 ஆண்டுகளாக மீனவர்களை தாக்குவது, கைது செய்வது என்ற அளவிலேயே அட்டகாசங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த சிங்களக் கடற்படை, இப்போது இளம் மீனவரை கொடூரமாக சுட்டுக் கொண்டிருக்கின்றனர். இலங்கைப் படையினரின் இத்தகைய கொடூரச் செயல்கள் இனியும் தொடர்வதற்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.
இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இரு நாட்டு மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டி வந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது; மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் இரு நாட்டு அரசுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுக்களிலும் இது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகும் தமிழக மீனவரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொலை செய்திருப்பதை பார்க்கும் போது அவர்கள் எந்த ஒப்பந்தத்தையும் மதிக்கத் தயாராக இல்லை என்பது உறுதியாகிறது.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், இனியும் இலங்கை நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இதையெல்லாம் இந்திய அரசு சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை தில்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இனியும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும்போதெல்லாம் அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அதை கிடப்பில் போடுவதை தமிழக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. மீனவர் பிரிட்ஜோ கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதற்கு காரணமான இலங்கைக் கடற்படையினரை கைது செய்து ஒப்படைக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும். அதை செய்யத் தவறினால் இண்டர்போல் மூலமாகவோ, இந்தியப்படைகளை அனுப்பியோ அவர்களை கைது செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு ஜெயலலிதா 115 கடிதங்கள் எழுதியுள்ளார் என்பதையே சாதனையாக பேசிக் கொண்டிருக்காமல், நமது மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். அத்துடன் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
-ஜே.செல்வகுமார்.