இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக சொல்லி, கடந்த 5 நாட்களில் 45 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி அடித்து சித்தரவதை செய்து கைது செய்துள்ளனர்.
மேலும், இந்திய மீனவர்களின் படகு, வலை, சுழியோடி முகமூடிகள், சுழியோடி காலணிகள் ஆகியவற்றையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்திய மீனவர்களுக்கு அரணாகவும். பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய நமது இந்திய கடற்படையினர், இலங்கை கடற்படையினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதால்தான் இதுப் போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று வாய் கூசாமல் பேசும் இந்திய ஆட்சியாளர்கள், இந்திய மீனவர்கள் எல்லையை தாண்டும்வரை இந்திய கடற்படை என்ன செய்து கொண்டு இருக்கிறது? எல்லையில் நின்று தடுக்க வேண்டியதுதானே?
எல்லை பாதுகாப்பு என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அந்நியர்களை உள்ளே அனுமதிக்காமலும், நம் மக்களை அந்நிய பகுதிகளில் அத்துமீறி செல்லாமலும் பார்த்துக் கொள்வதுதானே? அந்த கடமையை சரிவர செய்தால் இது போன்ற சம்பவங்கள் எப்படி நடக்கும்?
இந்திய கடற்படையினர் விழிப்பாக இல்லை என்பது இதன் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. அப்படியானால், இவர்கள் விழித்து இருந்து முறையாக வேலை செய்யவில்லையா? (அல்லது) யாரிடமாவது விலை போய்விட்டார்களா?
இதை சரி செய்யாதவரை இதுப் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.