இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விண்ணப்ப விவரங்களை, டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளதாக, அவரது மனைவி சாக் ஷி சிங், மத்திய தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்தவர் மகேந்திர சிங் தோனி, சமீபத்தில் தனக்கு ஆதார் எண் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இப்பணியில் ஈடுபட்ட சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் இதை பெருமையுடன் டுவிட்டரில் போட்டோக்களுடன் வெளியிட்டது. தோனி தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோ, அவரது ஆதார் விண்ணப்ப போட்டோ ஆகியவை, டுவிட்டரில் வெளியானது.
இதை பார்த்து கோபமடைந்த தோனியின் மனைவி சாக் ஷி சிங், டுவிட்டர் மூலமே, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் அளித்தார்.
இதற்கு சி.எஸ்.சி., நிறுவனம் சார்பில், போட்டோ மட்டுமே வெளியிடப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், மேலும் கோபமடைந்த சாக் ஷி சிங், ‛விண்ணப்ப போட்டோவை வெளியிடலாமா? தனி மனித சுதந்திரத்தில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது?’ என, பதில் கேள்வி எழுப்பினார். கடைசியாக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தனி மனித சுதந்திரத்தையும், வாழும் உரிமையையும் கேள்வி குறியாக்கும் ஆதார் அட்டை:
கை விரல் ரேகை, கண் பாவை, முகம், பெயர், முகவரி இவற்றை பதிவு செய்யும் ஆதார் அடையாள அட்டை மூலம், பொது விநியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் களையப்படும்; கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதி மக்களைச் சென்றடையும்; அனைவருக்கும் கல்வி கிட்டும்; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஓர் அடையாளம் தரப்படும்; அரசின் நலத் திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடையும்; அதிகாரிகளின் ஊழல்-முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும்; நாட்டுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று மத்திய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சொல்லிவருகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கும் ஆதார் அடையாள அட்டைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்கள் கூறும் இந்தக் காரணங்கள் கற்பனையானவையே. உண்மையான காரணம், நாட்டு மக்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போலக் கண்காணிப்பதும், உளவு வேலை பார்ப்பதுமேயாகும்.
இந்த ஆபத்தை இன்னும் உணராமல், நம் இந்திய மக்கள் ஆதார் அட்டைக்காக தனது அங்க அடையாளங்களை பதிவு செய்வதற்கு விழுதடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
தொடக்கத்தில், ஆதார் அட்டையை கொண்டு வரும் பொழுது “இது கட்டாயமில்லை” என்று சொல்லி தான் கொண்டு வந்தார்கள். பின்னர், கேஸ் மானியம் பெற ஆதார் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள். கேஸ் மானியம் பெற ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மாற்றினார்கள்.
இப்பொழுது குடும்ப அட்டை பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். நாளை உங்கள் மின்சார கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பார்கள். பின் வாகனப் பதிவு, உங்கள் ஓட்டுனர் உரிமம், வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும்.
நாளை நீங்கள் ஒரு நியாயமான மக்கள் நலன், சமூக நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடி ஒருநாள் கைதாகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கைரேகை அங்கு பதிவு செய்யப்படும். நீங்கள் ‘அரசிற்கு எதிரானவர்’ என்று ஆவணப்படுத்தப்படும். நீங்கள் பாஸ்போர்ட் எடுக்கும்போதோ, அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ உங்களை அரசு முடக்கும்.
ஒரு உதாரணத்திற்கு என்று எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கும், சொத்து வரியும் ஒரே ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளது. நாளை சொத்து வரி என வரும்போது, உங்கள் சம்மதம் இல்லாமலேயே உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அரசு பணம் எடுக்கும் நிலை நிச்சயம் வரும். இதே போல் மின்சார கட்டணம் முதல் பலவற்றிற்கு நீளும்.
நீங்கள் வீடு தேடி ஒரு வீட்டிற்கு குடியேற வேண்டும் என்றால், அந்த ஏரியா காவல் நிலையத்தில் உங்கள் கைரேகையை வைத்து, ஒழுக்க சான்றிதழ் வாங்கி வந்து குடியேற வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு, ‘குற்றங்களை குறைக்க இது அவசியம்’ என்று பிரச்சாரம் செய்யப்படும். இதெல்லாம் நடக்காது என்று நினைக்கிறீர்களா?
இன்று உங்கள் செல்போனுக்கு ஒரு சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால்கூட, ஆதார் அட்டை இல்லாமல் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் அரசாங்கத்தை நம்பி தந்த உங்கள் தகவல்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
உங்கள் கைரேகை உட்பட உங்கள் தகவலை ஒரு தனியார் பயன்படுத்த முடிகிறதென்றால், நாளை எவரோ செய்த குற்றச் செயலில் உங்கள் கைரேகையை போலியாக சித்தரித்து நீங்கள் செய்ததாக மாற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
மக்கள் வரி பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு இந்திய இராணுவ தேர்வு கேள்விதாள்களையே பாதுக்காக்க முடியாதவர்கள்; பணத்திற்காக இந்திய இராணுவ இரகசியங்களைகூட எதிரி நாட்டவர்களிடம் விற்பனை செய்யும் அதிகாரிகள் இருக்கும் இந்த தேசத்தில், ஆதார் அட்டை இரகசியங்கள் நிச்சயம் பாதுக்காக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் சொல்வதை எப்படி நாம் நம்புவது?
அதனால்தான் ஆதார் அட்டை குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தும் கூட, இவ்விசியத்தில் அரசாங்கத்தின் பதில்கள் திருப்தியாக இல்லாதக் காரணத்தால்தான், இந்திய உச்ச நீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதற்கும், நடைமுறை ப்படுத்துவதற்கு தொடர்ந்து அரசாங்கத்திற்கு தடைவிதித்து வருகிறது.
ஆனால், இத்திட்டத்தை எப்பாடுப்பட்டாவது 100% செயல்படுத்தியே காட்டுவோம் என்று மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து அடம்பிடித்து வருகிறார்கள்.
இவ்விசியத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை, மத்தியரசு கடுகளவும் மதிக்காதபோது, மத்தியரசு உத்தரவை மட்டும் மக்கள் மதிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
எனவே, உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை இத்திட்டத்தை ஒத்திவைப்பதுதான் நாட்டிற்கும் நல்லது; மக்களுக்கும் நல்லது.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com