மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட், கடந்த மார்ச் 23-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த போது, ஏர் இந்தியா விமான நிறுவன மேலாளரை செருப்பால் அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு இந்திய விமானிகள் சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவிடம் கடந்த மார்ச் 24-ம் தேதி புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தன.
ஏர் இந்தியா முடிவு சரியானது தான் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவும் தெரிவித்தார்.
இந்த பிரச்சனையை சிவசேனா எம்.பி.க்கள் இன்று பாராளுமன்றத்தில் கிளப்பினார்கள். மத்திய விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜுவை முற்றுகையிட்டு அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல், அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டது.
அமளிக்கிடையே பேசிய மந்திரி அசோக் கஜபதி ராஜு, விமானத்தில் செல்லும்போது எம்.பி.யாக இருந்தாலும் அவர் பயணிதான். எனவே, விமான பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்று கூறினார்.
ரவீந்திர கெய்க்வாட் பேசும்போது, தனது செயல் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார். ஆனால், விமான நிறுவன அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவிற்கு, சிவசேனா எம்.பி. கெய்க்வாட் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், தனக்கு விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com