தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கக் கோரி மருத்துவர் காமரா உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டை வழங்குவதில்லை என வழக்கு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து மருத்துவ மேற்படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை என்று கூறிய உயர்நீதிமன்றம், வழக்கு செலவு தொகையாக தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தலா ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழக அரசு வழங்கும் ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாய்வு பணிக்கும், மருத்துவக் கவுன்சிலின் ஒரு கோடி ரூபாயை மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்துக்கும் வழங்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-கே.பி.சுகுமார்.