‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 500 நகரங்களில் ஆய்வின் படி தயாரிக்கப்பட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு வெளியிட்டார். ஆய்வில் சுமார் 37 லட்சம் பேர் பங்கு பெற்று உள்ளனர். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 73 நகரங்கள் இடம்பெற்றது, சுமார் ஒரு லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டு உள்ள பட்டியலில் 6–வது இடத்தை தமிழகத்தின் திருச்சி நகரம் பிடித்துள்ளது. கடந்த வருடம் வெளியிட்டப்பட்ட பட்டியலில் திருச்சி 3-வது இடத்தை பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 இடங்களை பிடித்த நகரங்கள்:–
இந்தூர் (மத்திய பிரதேசம்)
போபால் (மத்திய பிரதேசம்)
விசாகப்பட்டணம் (ஆந்திர பிரதேசம்)
சூரத் (குஜராத்)
மைசூர் (கர்நாடகம், கடந்த வருடம் முதலிடத்தில் இருந்தது)
திருச்சி (தமிழகம்)
புதுடெல்லி
நவிமும்பை (மராட்டியம்)
திருப்பதி (ஆந்திர பிரதேசம்)
வதோதரா (குஜராத்)
தூய்மை நகரங்கள் பட்டியலில் குஜராத் மற்றும் சத்தீஷ்கார் மாநிலத்தில் அதிகமான நகரங்கள் மேம்பட்டு உள்ளது என வெங்கையா நாயுடு குறிப்பிட்டு உள்ளார். உத்தரபிரதேச மாநில நகரங்கள் பட்டியலில் கடைசி இடங்களை பிடித்து உள்ளது.
-ஆர்.மார்ஷல்.