திருச்சி மாவட்டம், காட்டூர், காமராஜ நகரில் வசித்து வந்த ராஜேந்திரன், லதா தம்பதியின் மகன் ராம்பிரபு (வயது 17), இவர் 8 வயது வரை தாய், தந்தை அரவணைப்பில் வழக்கமான குழந்தைகளை போல 3-ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்று படித்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் இவரது பெற்றோர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டு, இவரது தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறி விட, வறுமையின் காரணமாகவும், குடும்பச்சூழ்நிலை காரணமாகவும், பள்ளி படிப்பை பாதியில் விட்டு விட்டு வயிற்று பிழைப்பிற்காக குழந்தைத் தொழிலாளியாக மாறிப்போனார்.
குழந்தைத் தொழிலாளியாக சுற்றித்திரிந்த இவரை மீட்டெடுத்து, திருச்சி கீழ அம்பிகாபுரத்தில் உள்ள செர்வைட் சோஷியல் சர்வீஸ் சொசைட்டியின் செயலாளர் சகோதரி லில்லியன் மேரியிடம் ஒப்படைத்தனர்.
இவரின் குடும்ப பின்னனியை கேட்டறிந்த சகோதரி லில்லியன் மேரி, இவருக்கு முறையாக ஆலோசனை வழங்கி, செர்வைட் குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.
அதன் பிறகு 10 ஆம் வகுப்பு வரை அருகில் இருந்த அம்பிகாபுரம் அரசு பள்ளியில் படிக்க வைத்தார். அதன் பிறகு திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்த ஆண்டு ராம்பிரபு 12 –ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.
இன்று 12 –ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ராம்பிரபு 1059 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இவர் மேற்கொண்டு பட்டப்படிப்பை திருச்சி புனித வளனார் கல்லூரியில் தொடர விரும்பி அதற்காக விண்ணப்பித்து இருக்கிறார். (St. Joseph College, Application No:25930, Course: B.com Commerce)
அறிவாளிகளை மேலும் அறிவாளிகளாக ஆக்குவதற்கு பெயர் உண்மையான கல்வியல்ல! கல்வி கற்பதற்கே வாய்பில்லாத இது போன்ற மாணவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பை வழங்குவதுதான் உண்மையான கல்வி.
அதை திருச்சி புனித வளனார் கல்லூரி நிர்வாகம் நிச்சயம் வழங்கும் என்று நாமும் நம்புவோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com