உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதற்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதே காரணம் என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், சமாஜ்வாதி தலைவர்அகிலேஷ் யாதவ் ஆகியோரும், மாயாவதியின் கருத்தை ஆமோதித்தனர். அதே போல், டில்லி மாநகராட்சியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாக கூறினார்.
ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், எந்தக் கட்சிக்கு ஓட்டளித்தாலும், அந்த ஓட்டு, பா.ஜ.க. வேட்பாளருக்கு பதிவாகும் வகையில், ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, மறுப்பு தெரிவித்தார்.
இதை அடுத்து, டில்லி சட்ட சபையில், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., ஒருவர், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் எனக் கூறி, அது குறித்த செயல்முறை விளக்கமும் அளித்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதி நிதிகள் மத்தியில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் அதன் நம்பகதன்மை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க, தேர்தல் கமிஷன் முன் வந்தது.
இது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பிரதி நிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, டில்லி விஞ்ஞான் பவனில் உள்ள அலுவலகத்தில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள், அதன் நம்பகத்தன்மை குறித்து, தேர்தல் கமிஷன் சார்பில் நேற்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பத்திரிகையாளர்களும் பங்கேற்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையிலான குழுவினர், இந்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் பயன் படுத்தப்படும் இயந்திரங்களை ஒப்பிடுகையில், நம் நாட்டில் பயன்படுத்தும் இயந்திரங்களில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் பதிவாகும் ஓட்டுகள் குறித்த விபரங்கள், ‘சிடி‘யில் பதிவேற்றப்பட்டு அதன் பின் ஓட்டுகள் எண்ணப்படும். ஆனால், நம் இயந்திரங்களில் அது போன்ற செயல்பாடு கிடையாது.
தவிர, ‘விவிபாட்‘ எனப்படும் ஒப்புகைச் சீட்டில், வாக்காளர், எந்த வேட்பாளருக்கு எந்த சின்னத்தில் ஓட்டளித்தார் என்ற விபரம் தெளிவாக இடம் பெறும். நம் இயந்திரத்தை எந்த வகையிலும், ‘ஹேக்‘ செய்ய முடியாது. நாம் பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 100 சதவீதம் நம்பகத்தன்மை உடையவை.
இயந்திரத்தின் செயல்பாடு, நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பும் அரசியல் கட்சிகள், அதில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
அதன்படி, ஜூன் 3 முதல், அரசியல் கட்சிகள் தங்கள் தரப்பு வாதத்தின்படி, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கலாம். இது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இயந்திரத்தில் முறைகேடு நடப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க விரும்பும் கட்சிகள், இம்மாதம், 26-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும், 3 பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவர்.
இந்த விஷயத்தை, தேர்தல் கமிஷன் ஒரு சவாலாகவே ஏற்றுக் கொள்கிறது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் எவ்வித முறை கேடும் செய்ய முடியாது என்பது, கூட்டத்தின் முடிவில் நிரூபணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.