திருச்சி ஹெச்ஏபிபி தொழிற்சாலையில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியை வரும் 12-ம் தேதிக்குள் திறக்காவிட்டால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக பெற்றோர் சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே சூரியூர் பகுதியில் உள்ள மத்திய பாதுக்காப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெச்ஏபிபி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் திருச்சி திருப்பராய்த்துறை தபோவனம் மற்றும் ஹெச்ஏபிபி நிர்வாகம் இணைந்து 1988- ஆம் ஆண்டு பரமஹம்ஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தது. ஹெச்ஏபிபி நிர்வாகம் கட்டிடம் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியங்களை வழங்கி வந்தது. திருப்பராய்துறை தபோவனம் பள்ளியை நிர்வகித்து வந்தது. அதற்கு 20 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு ஹெச்ஏபிபி நிர்வாகம் தபோவனம் நிர்வாகத்திடமிருந்து வேறு ஒரு நிர்வாகத்திற்கு பள்ளியை மாற்ற முடிவு செய்தது. அப்போது பரமகம்ஷா பள்ளியில் வேலைப் பார்த்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து விட்டு, புதிய ஆசிரியர்களை நியமிக்க 2008-ஆம் ஆண்டு நிர்வாகம் முடிவு எடுத்தது.
இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் ஹெச்ஏபிபி நிர்வாத்தை கண்டித்து வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கில் தங்களை தொடர்ந்து பணி செய்ய ஹெச்ஏபிபி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். மேலும், ஹெச்ஏபிபி நிர்வாகத்தின் ஊழியர்களாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமெனகோரியிருந்தனர்.
ஆனால், நீதிமன்றம் அவர்களை ஹெச்ஏபிபி ஊழியர்களாக கணக்கில் வைத்து கொள்ள முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் தங்களுக்கு என்று ஒரு சங்கத்தை தொடங்கி மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதற்கிடையே தனியார் நிர்வாகத்திடம் பள்ளியை ஒப்பந்தம் விட்டால் பள்ளியின் கட்டணம் அதிகரிக்கும். அதனால் பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்படும், அதனால் பள்ளியை ஹெச்ஏபிபி நிர்வாகமே நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததோடு பள்ளியில் பயிலும் மாணவியின் பெற்றோரான சூரியூரை சேர்ந்த அழகர் என்பவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளர்.
இதனை விசாரித்த நீதிபதி இந்திராபேனர்ஜி பள்ளியை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது; பள்ளியின் கட்டணத்தை உயர்த்த கூடாது; மேலும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தி பள்ளியை ஹெச்ஏபிபி நிர்வாகமே நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இடைகால தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அரசு வறுமைகோடு பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீதம் பேருக்கு கட்டணமில்லாமல் இலவச கல்வி வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதன்படி பள்ளில் ஒன்றாம் வகுப்பிற்கு 8 பேர் தேர்வு செய்யபட்டுள்ளனர். அவர்களை பள்ளி ஆரம்பிக்கும் முன்பு சேர்க்க வேண்டும். ஆனால், கடந்த 3-ம் தேதி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து பார்த்தப்போது பள்ளி திறக்கவில்லை. இதற்குரிய விளக்கத்தை ஹெச்ஏபிபி நிர்வாகத்திடம் கேட்டப்போது உரிய பதில் வரவில்லை. இந்நிலையில் பெற்றோர்கள் பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர், இருந்தும் எந்த பயனுமில்லை.
இந்நிலையில் தமிழக அரசு 7-ம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த பள்ளி மட்டும் இன்று வரை திறக்கவில்லை. மேலும், 10-ம் வகுப்பு படிப்பு முடித்தவர்களுக்கு மாற்று சான்றிதழும், மதிப்பெண் சான்றிதழும் வழங்கவில்லை. பள்ளியில் மாணவ, மாணவிகளை சேர்க்கவுமில்லை.
இதனால் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளதோடு பள்ளியில் படிப்பை முடித்தவர்கள் வேறு பள்ளியில் சேர்வதற்கு சான்றிதழ்களை வழங்காதால் அவர்களது நிலையும் கேள்வி குறியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் சங்கத்தினர் இன்று காந்தலூரில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்திற்கு பரமஹம்ஷா மெட்ரிக் பள்ளி பெற்றோர் சங்க தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் அழகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 1988 முதல் 2017 ஆம் ஆண்டுவரை உள்ள நடைமுறையையே பின்பற்றப்பட வேண்டும். கல்வி கட்டணத்தை உயர்த்த கூடாது பழைய ஆசிரியர்களே தொடர வேண்டும் பள்ளி நிர்வாகம் மாறும் சூழ்நிலை ஏற்பட்டால் ஹெச்ஏபிபி நிர்வாகமே பொறுப்பேற்று நடத்த வேண்டும். வரும் 12-ம் தேதி பள்ளியை திறக்க வேண்டும் இல்லையென்றால், 13-ம் தேதி காந்தலூர், சூரியூர், இலந்தைப்பட்டி, பழங்கனாங்குடி, கும்பக்குடி பூலாங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.