தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், சித்தூர் மாவட்டம், நெலாவயல் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் துணை ஆறான கொசா ஆற்றில் ஆந்திர அரசு தமிழக அரசுடன் கலந்து பேசாமல் தன்னிச்சையான முறையில் தடுப்பணைப் பணிகளை மேற்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆற்றின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வெளிகாரம் கண்மாயின்கீழ் உள்ள சுமார் 354 புள்ளி மூன்று இரண்டு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து பெரிதும் பாதிக்கப்படும். ஆந்திர அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவிக்கிறது. ஆந்திர முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்துநிறுத்துமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் கொசஸ்தலை ஆற்றின் துணை ஆறுகளில் வேறு எந்த தடுப்பணைகளையும் கட்டக்கூடாது என்றும் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
-ஆர்.மார்ஷல்.