இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாராளுமன்ற இல்லத்தில் மக்களவை செயலாளர் அருண் மிஸ்ராவிடம், தனது வேட்பு மனுவை ராம்நாத் கோவிந்த் அளித்தார். ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோதி முதலில் முன்மொழிந்தார். இவருக்கு அடுத்த படியாக ராஜ்நாத்சிங் இரண்டாவதாக முன்மொழிந்தார்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உட்பட 7 மாநில முதலமைச்சர்கள் வேட்பு மனுதாக்கலின் போது கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியும், அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் ஓ. பன்னீர் செல்வமும் ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று டி.டி.வி.தினகரனும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் எலியும், பூனையுமாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர், குடியரசு தலைவர் தேர்தலில் மட்டும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு போட்டி, போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவித்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
பா.ஜ.க.-வையும், பிரதமர் நரேந்திர மோதியையும் பகைத்துக்கொள்ள இந்த மூன்று பேருமே விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com