தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று எழுதிய கடிதத்தில், ராமேஸ்வரத்திலிருந்து 2 இயந்திர படகுகளில் மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ஒரு இயந்திரப் படகில் கடலுக்கு சென்ற 3 மீனவர்களையும், நேற்று முன்தினம், இலங்கை கடற்படை முறையே தலைமன்னாருக்கும், காங்கேசன்துறைக்கும் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது. இந்த போக்கை தடுத்து நிறுத்த தூதரகம் மூலம் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் மழை–வெயிலில் காய்ந்து வருவதால் சேதமடைந்துள்ளது. அவற்றை விடுவித்து, பழுது நீக்கி ஒப்படைக்க வேண்டும் என்று, மறைந்த மாண்புமிகு அம்மா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதையும் முதலமைச்சர் நினைவுப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, நேற்று முன்தினம் பிடித்து செல்லப்பட்ட 14 மீனவர்கள் உட்பட அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 42 மீனவர்களையும், 141 படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com