திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 450 டன் அளவுக்கு குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.
அரியமங்கலம் குப்பை கிடங்கில் அவ்வப்போது திடீர், திடீரென தீ விபத்து ஏற்பட்டு குப்பைகள் எரிய தொடங்கும். உடனே தீயணைப்பு துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
இதனை தொடர்ந்து அரியமங்கலம் குப்பை கிடங்கை அங்கிருந்து வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்காக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் அரியமங்கலம் குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டமும் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இன்று காற்று வேகமாக வீசியதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராடி வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இந்த தீ விபத்தால் அரியமங்கலம், அம்பிகாபுரம், காமராஜ் நகர், காட்டூர் வரை புகை மூட்டமாக இருக்கிறது. குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் எரிவதால் காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் மூச்சு திணறலால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
புகை மூட்டத்தால் திருச்சி–தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அப்பகுதியில் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளது.
-ஆர்.சிராசுதீன்.