சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஊர்காவல் படை மற்றும் திருவெறும்பூர் வட்டார காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
இந்த பேரணியில் போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை ஏந்தியும், பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பேரணியில் ஈடுப்பட்டனர்.
பேரணியை திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது பெல் கணேசபுரத்திலிருந்து தொடங்கி, திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவெறும்பூர் கடை வீதி வரை வந்தடைந்தது.
இப்பேரணியில் ஊர் காவல் படை கமாண்டோ சிராஜூதீன், ஆயுதப்படை டி.எஸ்.பி. பொன்னுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணியில் கலந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு முன்கூட்டியே காவல்துறையினர் தகவல் கொடுக்காததால், மாணவர்கள் வரவில்லை. அதனால் காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த பேரணி தொடங்க முடியவில்லை. 9.30 மணிக்கு மேல் தான் முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு போலீசார் விரைந்து சென்று, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர்களிடம் ஒரு வழியாக பேசி 10.30 மணிக்கு மேல் காவல்துறை வாகனங்களிலேயே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து பேரணியை நடத்தினார்கள்.
அதுவரை ஊர்காவல்படையினர் கொளுத்தும் வெயிலில் பெல் கணேசபுரத்திலேயே காத்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. கலைச்செல்வனிடம், திருவெறும்பூர் பகுயில் கஞ்சா விற்கப்படுவது குறித்தும், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றிய பிறகு பெட்டி கடைகளில் எல்லாம் மதுபானம் விற்கப்படுவது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து தகவல் சேகரித்து வருவதோடு, அப்போ அப்போ சிலரை கைது செய்து வருவதாகவும், மேலும் இதுக்குறித்து நடவடிக்கை எடுக்கபடுமென்றும் மலுப்பலாக பதில் கூறி சென்றார்.
-ஆர்.சிராசுதீன்.