காலிமனைகள் கழிவு நீர் குளங்களாக காட்சியளிக்கிறது; கூத்தைபார் பேரூராட்சி 3-வது வார்டின் அவலநிலை!

S2760014

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சிக்கு உட்பட 3-வது வார்டில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு மனைகளில் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியான வெங்கடேஸ்வரா நகர், மூவேந்தர் நகர், அம்பிகைநகர், கணேஷ் கார்டன் ஆகிய பகுதிகள் உருவாகி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அந்தப்பகுதி பொது மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர், தெரு விளக்கு மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி முழுமையாக செய்து கொடுக்கப்படவில்லை.

ஆனால், கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வரி மட்டும் வசூலித்து வருகிறது.

தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர கோரி, அப்பகுதி பொது மக்கள் கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும், இது நாள் வரை எந்த வித அடிப்படை வசதியும் முழுமையாக செய்து தரவில்லை.

இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தெரு விளக்குகள் அமைக்கப்பட்டும் தெரு விளக்குகள் எரியவில்லை.

S2760032S2760027

மேலும், பொது மக்கள் தேவைக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மினி சின்டெக்ஸ் டேங் போர்வெல் அமைத்து குடிநீர் தொட்டி வைக்கப்பட்டது. அப்படி வைத்து அது பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாகவே அந்த சின்டேக்ஸ் டேங்கை பேரூராட்சி நிர்வாகம் உடைத்து எடுத்து சென்று விட்டது. ஆனால், அந்த இடத்தில் போடப்பட்டுள்ள போர் மற்றும் மின் இணைப்புகள் அப்படியே உள்ளது.

இதுக்குறித்து பொது மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, உங்களுக்கு காவிரி குடிநீர் வேண்டுமென்றால் இதைபற்றி பேசக்கூடாது என்று, அப்போதைய பேரூராட்சி செயல் அலுவலர் மிரட்டியுள்ளார். ஆனால், இதுநாள் வரை காவிரி கூட்டு குடிநீரும் கிடைக்கவில்லை.

அரசு எங்கள் பகுதிக்கு ஒரு லட்சத்து 50 அயிரம் செலவில் அமைக்கப்பட்ட மினி குடிநீர் தொட்டியையும் எடுத்து கொண்டு போய்விட்டனர். அதனால் குடிநீர் கிடைகாமல் திருச்சி மாநகராட்சி 64-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மினி குடிநீர் தொட்டியில் போய்தான் குடிநீர் எடுத்து வருகின்றனர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தேவையான கழிவு நீர்வடிகால் வசதியை கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செய்து கொடுக்கவில்லை இதனால் அந்தப் பகுதியில் உள்ள காலிமனைகள் கழிவு நீர் குளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதனால் அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அடிக்கடி டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

இதுக்குறித்து கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால், வரி மட்டும் வழக்கம் போல் வந்து வசூலித்து செல்கின்றனர் என அப்பகுதி பொது மக்கள் புலம்புகின்றனர்.

எனவே, சம்மந்தப்ட்ட அதிகாரிகள் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்கால அடிப்படையில் செய்து கொடுப்பார்களா?

-ஆர்.சிராசுதீன்.