காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறையினர் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
கடந்த வாரம் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் முரளி என்பவரின் மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு எழுந்தார். இதற்கு பிறகும் சுகாதாரத்துறை சுதாரித்து கொள்ளவில்லை.
இன்றைய நிலவரப்படி 3 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 7 பேர் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். அதில் சின்ன காஞ்சிபுரம் பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி ஜெயஸ்ரீ, சீழ்அம்பி பகுதியை சேர்ந்த 2 வயது சிறுமி அசீதா, அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி யோகலட்சுமி, செம்பரபாக்கம் தேன்மொழி, பரந்தூர் சத்தியா, மானாமதி குப்பு, அரக்கோணம் லோகம்மாள் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காஞ்சிபுரம் மற்றும் கோளிவாக்கம் போன்ற பகுதிகளிலும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. எனவே, தமிழக சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-மு. ராமராஜ்.
–ச. ரஜினிகாந்த்.