அடிப்படை வசதிகள் கேட்டு ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்!

???????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஏற்காடு வட்டாட்சியர் அலுவலக வாயிலில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஏற்காடு பேருந்து நிலையத்தில் துவங்கிய ஊர்வலம் கடை வீதி, காந்தி பூங்கா, அலங்கார ஏரி, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

அங்கு சி.பி.எம். ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணாடி ராஜ் தலைமையில் ஆர்பாட்டம் துவங்கியது. சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன் துவக்க உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது “ஏற்காடு மலைப் பகுதியில் உள்ள 9 பஞ்சாயத்திலும் பெரும்பாலன மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குறிப்பாக ஏற்காடு டவுன் பஞ்சாயத்தில் மட்டும் 4000-க்கும் மேற்ப்பட்டோர் வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு விரைந்து பட்டா வழங்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

ஏற்காடு ஜெரீனாக்காடு பகுதியில் அங்கு வாழும் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள குப்பை குடோனை உடனடியாக ஊருக்க ஒதுக்குப்புறமான பகுதிக்கு மாற்ற வேண்டும் ” இவ்வாறு கூறினார்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தில்லைக்கரசி, ஜோதி, நேரு, கிருஷ்ணமூர்த்தி, ருக்மணி, முத்துராமன், கோவிந்தன் ஆகியோரும் தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து பேசினர். ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி நன்றி கூறினார். இந்த ஆர்பாட்டத்தில் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

-நவீன் குமார்.