திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் தமிழக அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
இந்த பேரணியை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் காமராஜ் தலைமை வகித்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார், துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அம்பேத்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவாக்குடி பெரியார் திடலில் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கொடி அசைத்து டெங்கு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசுகையில்,
நிலவேம்பு கசாயம் அனைத்து காய்ச்சலுக்கும் உகந்தது. இந்த நிலவேம்பு கசாயமானது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும். நில வேம்பு கசாயத்தின் பயன்பாட்டால் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்புக்கான வழிமுறைகள் கையாளப்படுவதால் டெங்கு பரவாமல் தடுக்கபட்டுள்ளதாக கூறினார்.
இந்த பேரணியில் துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடி பேரணியாக அண்ணா வளைவு பெரியார் திடலில் தொடங்கி, அரசு கலை கல்லூரி வரை நடந்தது. முன்னதாக இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
துவாக்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் லாவண்யா, திருவெறும்பூர் ஆரம்ப சுகாதார நிலைய ஒமியோபதி மருத்துவ அலுவலர் கமலாதேவி, காட்டூர் ஆரம்ப சுகாதார ஆயுர்வேத மருத்துவ அலுவலர் கோமதி, நவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மற்றும் யோகா மருத்துவ ஆலோசகர் இசை அமுது ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.
-ஆர்.சிராசுதீன்.