முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 2-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.அவரது நினைவை போற்றும் வகையில், அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரம் பேக்கரும்பில் நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் பாது காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார் பில் ரூ. 15 கோடி செலவில் இந்த மணி மண்டபம் கட்டப் பட்டுள்ளது.
மணி மண்டபத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பாம்பன் புறப்பட்டார்.. பிரதமர் நரேந்திர மோதியுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் பயணம் செய்தனர்.
பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் சென்றனர். அங்கிருந்து அப்துல்கலாம் மணிமண்டபத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி கார் மூலம் சென்றார்.
மணிமண்டபத்தை அடைந்ததும், அங்குள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை, மோடி ஏற்றி வைத்தார். பின்னர் மணி மண்டபத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் உடை, விருதுகள், பொன்மொழிகள் ஆகியவற்றை பார்த்து ரசித்தார். விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் வகையில் அப்துல்கலாம் 2020 என்ற பெயரில் அப்துல்கலாம் சாதனை பிரசார வாகனம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை பிரதமர் நரேந்திர மோதி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மணிமண்டபத்தில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோதி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் குடியிருப்பு வளாகம் சென்றார்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் இருந்து ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை ரூ. 59 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடற்கரை சாலையை திறந்து வைத்தார்.
ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வரை செல்லும் புதிய ரெயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த விழாக்களில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதா ராமன், அமைச்சர் டாக்டர் மணி கண்டன், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வெளிமாநில முதலமைச்சர்கள், கவர்னர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
ராமேஸ்வரம் வந்ததை என் பாக்கியமாக கருதுகிறேன் என தமிழில் பேசி உரையை தொடங்கினார் . தொடர்ந்து பேசியதாவது:-
புண்ணிய பூமியான ராமேஸ்வரம் வந்ததில் பெருமிதம் கொள்கிறேன். ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம் அமைதியான, ஆழமான சிந்தனை கொண்டவர்.
மிக குறுகிய காலத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டதில் மகிழ்ச்சி. தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே ஓய்வெடுத்து, கூடுதல் நேரம் உழைத்து கலாம் மணிமண்டபத்தை கட்டி தந்துள்ளனர் .மிகக் குறுகிய காலத்தில் மணி மண்டபத்தை கட்டி முடித்ததற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.
இந்த விழா மேடையில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இந்த விழா மேடையில் ஜெயலலிதா இருந்திருந்தால் மணிமண்டபம் கட்டிய தொழிலாளர்களை பெரிய அளவில் பாராட்டியிருப்பார்.
ராமேஸ்வரம் புனித யாத்திரை வருபவர்கள், கலாம் மணிமண்டபத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். நாட்டு மக்கள் என் பின்னால் இருப்பதே மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதற்கு காரணம். மாற்றத்தை ஏற்படுத்தும் அரசாங்கம் டெல்லியில் அமைந்துள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களை முடித்த விவேகானந்தர் முதன் முதலாக ராமேஸ்வரத்தில் தான் கால் பதித்தார் இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com