பெரம்பலூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி, அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் மற்றும் அ.தி.மு.க.வினர் மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த அவருக்கு மகளிர் அணியினர் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
அதன் பின்னர் காரில் ஏறிய அவர், அங்கிருந்து பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
பெரம்பலூரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். உருவப்படத்தை திறந்து வைத்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் கே.பழனிச்சாமி பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.5.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்தார்.
ரூ.11.45 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி முதலமைச்சர் கே.பழனிச்சாமி உரையாற்றினார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமற்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
-ஆர்.அருண்கேசவன்.