பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ரூ.30 லட்சம் அபராதம்!

grrs

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சி.பி.ஐ. நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் இன்று விதித்துள்ளது.

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் உள்ளது. அங்கு தங்கியிருந்த 2 பெண் துறவிகளை குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 15 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்றும், அவருக்கான தண்டனை விவரம் (இன்று) 28-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஹரியாணா, பஞ்சாப், டெல்லியில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு குவிந்திருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அந்த நகரை சூறையாடினர். அரசு, தனியார் கட்டிங்களையும் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்ஸா நகரிலும் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. பஞ்ச்குலாவில் 30 பேரும், சிர்ஸாவில் 8 பேரும் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் சிர்ஸா ஆசிரமம் உட்பட பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு கருதி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தற்காலிகமாக ரோட்டக் சிறைக்கு மாற்றப்பட்டது.

cbi judge

Mr.Jagdeep Singh., Special CBI Judge, Haryana.

Mr.Jagdeep Singh.,
Special CBI Judge, Haryana.

நீதிபதி ஜெகதீப் சிங் இன்று ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறைக்கு சென்றார். தண்டனை விவரம் தொடர்பாக சிபிஐ மற்றும் குர்மீத் ராம் ரஹீம் சிங் தரப்பினர் தங்கள் வாதங்களை எடுத்துரைக்க தலா 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இந்த பாலியல் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ வலியுறுத்தியது. குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குர்மீத் ராம் ரஹீம் சிங் உடல் நிலை, வயது, சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகோள் விடுத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீப் சிங், குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தார்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இரண்டு பலாத்கார வழக்குகள் என்பதால் ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com