அன்பு தங்கையே அனிதா!
நீட் தேர்வை எதிர்த்து
நீ நீதிகேட்டு போராடியபோது
ஏழை மாணாக்கர்களுக்கெல்லாம்
நீ வீரமங்கையாக திகழ்ந்தாய்…!
உரிமைக்கேட்டு
உச்சநீதி மன்றத்தின் கதவுகளை
நீ உலுக்கியப்போது…!
உன் துணிவைக் கண்டு -இந்த
உலகமே வியந்தது…!-ஆனால்
உன் அகால மரணத்தால்- இந்த
உலகமே இன்று அதிர்ந்தது…!
மருத்துவம் படிக்கத் துடித்த உனக்கு உன் உயிரின் மகத்துவம் புரியாமல் போனது ஏனோ?
இயற்பியலில் முழு மதிப்பெண்கள் பெற்ற உனக்கு இந்த இயல்பு நிலை தெரியாமல் போனது ஏனோ?
13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய புள்ளியாக இருந்த இந்த பிரபஞ்சம் மிக மிக வெப்பமானதால் பெருவெடிப்பு நிகழ்ந்து இந்த பிரபஞ்சம் உருவானது…..! -ஆனால் உன் மரணச் செய்திக் கேட்டு உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளமெல்லாம் இன்று இரணமானது…!
நீ ஏழையாகதான் இருப்பாய் என்று நாங்கள் எல்லோரும் நினைத்திருந்தோம் – ஆனால், நீ இப்படி கோழையாக இறப்பாய் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை!
ஒருவரது வாழ்வில் கருவறை முதல் கல்லறை வரை பின்தொடரும் பாடம் தான் கணிதம்! கணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற உனக்கு இந்த உண்மையான விடை தெரியாமல்போனது ஏனோ?
குழந்தை கருவறையில் இருக்கும் மாதங்கள் பத்தாகும்
கோவிலில் வீற்றிருக்கும் கிரகங்கள் ஒன்பதாகும்
எத்திசையும் எதிரொலிக்கும் திசைகள் எட்டாகும்
வாரத்தின் நாட்கள் ஏழாகும்
தமிழ் கடவுள் அரும்படை வீடு ஆறாகும்
அகிலத்தில் பூதங்கள் ஐந்தாகும்
சதுரத்தின் பக்கங்கள் நான்காகும்
சங்கத் தமிழ் மூன்றாகும்
பூமிக்குத் துருவங்கள் இரண்டாகும்
புவி மீது மக்களெல்லாம் இனி ஒன்றாகும்
தற்கொலை எண்ணங்கள் இன்று உன்னோடு பூஜ்யமாகட்டும்.
அன்பு தங்கையே அனிதா! உன் போராட்டக் குணத்தை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம்!- ஆனால், உன் தற்கொலை முடிவை வன்மையாக எதிர்கின்றோம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com