நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி, சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று (19.09.2017) மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரனுக்கு சாலையின் இருமருங்கிலும் அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
திருச்சி மாநகரில் திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் இன்று மாலை திருச்சியில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சியில் மேஜர் சரவணன் சாலை, ரவுண்டானா, எம்.ஜி.ஆர். சிலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக, டிடிவி தினகரன் உழவர் சந்தை மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடைக்கு வந்து சேர்ந்தார்.
பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த டிடிவி தினகரன், ப்ளஸ் டூ தேர்வில் மிக உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கல்வி படிப்பில் இடம் கிடைக்காததால், மனமுடைந்து தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து டிடிவி தினகரன், அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார்.
திருச்சி பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:
அவசர சட்டம் மூலம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு, மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார். தமிழக அரசு தவறான வாக்குறுதிகளை அளித்து, மாணவி அனிதாவின் உயிரை பறித்துவிட்டது.
நியாயம் கேட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களை பழிவாங்கும் விதமாக தகுதி நீக்கம் செய்துள்ளனர். 18 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தவறு என நீதிமன்றத்தில் நிரூபிப்போம். முதலமைச்சர் பழனிசாமி அரசின் அவைத் தலைவராக, ஆளுநர் வித்யாசாகர் ராவ் செயல்படுகிறார்.
இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.
இந்த பொதுக்கூட்டம் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, டிடிவி தினகரன் மிகுந்த சிரத்தை எடுத்திருக்கிறார். இது நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் என்று சொல்வதை விட, டிடிவி தினகரனின் பலத்தை நிரூபிக்க திரட்டப்பட்ட கூட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
-கே.பி.சுகுமார்.
படங்கள்: ஆர்.சிராசுதீன்.