திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவில் இருந்து வ.உ.சி.நகர் வரை, அய்யம்பட்டி செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை, மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவின்படி திருவெறும்பூர் வட்டாட்சியர் முழுமையாக அகற்றாமல், கண் துடைப்பிற்காக பாதி மட்டும் அகற்றியதை கண்டித்தும், சாலை போடுவதற்காக நடந்து வரும் பணியை தடுத்து நிறுத்தி, பொது மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது சம்மந்தமாக இன்று மாலை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தாசில்தார் ஷோபா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து கொள்ளலாம் என்றும், அதுவரை புதிதாக சாலை அமைப்பதற்கு எந்த பணியும் நடக்காது என்றும், துவாக்குடி காவல் (பொறுப்பு) ஆய்வாளர் அப்தூல்கபூர் அளித்த உறுதியின் பேரில், பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அண்ணா வளைவு – அய்யம்பட்டி சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-ஆர்.சிராசுதீன்.