உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஷாஹான்ஷாஹ்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கழிப்பறை கட்டுவதைப் பார்வையிட சென்றார்.
அப்போது அங்கு திடீரென்று அவர் கொத்தனாராக மாறினார். இடது கையில் மணியாஸ் கரண்டியையும், வலது கையில் செங்கல்லையும் எடுத்துக்கொண்டு கழிப்பறை கட்டும் வேலையை செய்தார். இதை தூரத்தில் நின்று கொண்டிருந்த அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் ஆச்சர்யமாக வேடிக்கைப் பார்த்தனர்.
மேலும், அங்குள்ள ஒரு ஏழையின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார்.
கால்நடை சுகாதார மையத்தையும், பராமரிப்பு நிலையத்தையும் மற்றும் ஆடு, மாடு பண்ணைகளையும் பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டார்.
பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள சுமார் 1,700 கால்நடைகளையும், அவற்றின் ஆரோக்கியத்திற்காக பணியாற்றும் கால்நடை மருத்துவ நிபுணர்களின் செயல்பாட்டையும், பிரதமர் நரேந்திர மோதி வெகுவாக பாராட்டினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பும், பராமரிப்பும் உண்மையிலுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு வாழும் மக்கள் மற்றும் அங்கு பிறக்கும் குழந்தைகளின் உயிர் பாதுகாப்புதான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
கால்நடைகள் நாட்டின் செல்வங்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதைவிட மிகவும் முக்கியமானது நாட்டு மக்களின் பாதுகாப்பும், குழந்தைகளின் ஆரோக்கியமான பராமரிப்பும் தான் என்பதை முதலில் நாம் உணரவேண்டும். ஏனென்றால், சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்.
“கண்களை விற்று விட்டு சித்திரம் வாங்குவதும்; குழந்தைகளை கொன்றுவிட்டு தொட்டில்கள் வாங்குவதும்” சுத்த பைத்தியக்காரத்தனம்.
கால்நடைகளின் மீது கரிசணம் செலுத்தும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கொஞ்சமாவது, மாநில மக்களின் நலன் மீதும், குழந்தைகளின் உயிர் மீதும் அக்கறை செலுத்துவதற்கு இனிமேலாவது முயற்சிக்க வேண்டும்.
நாட்டு மக்களின் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காப்பாற்றுவாரா? அவரது எதிர்கால நடவடிக்கைகள்தான் அதை நிரூபிக்க வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com