மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இன்று (25.09.2017) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத அளவுக்குக் கடுமையான பாதுகாப்பு ஜெ.ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டு இருந்தது.
அப்படியானால், 2016- ஆம் ஆண்டு செப்டம்பர் 21 –ந் தேதி இறுதியாக அரசு விழாவில் கலந்து கொண்ட ஜெ.ஜெயலலிதா அதன் பிறகு எங்கு சென்றார்?
ஜெ.ஜெயலலிதாவுக்கு பாதுகாப்புக்கு சென்ற தேசிய பாதுகாப்பு படையினர் (National Security Forces) இறுதியாக ஜெ.ஜெயலலிதாவை எங்கு அழைத்துச் சென்றனர்?
ஜெ.ஜெயலலிதாவின் கண் அசைவைக்கூடப் புரிந்துகொண்டு அதன்படி செயல்படக்கூடிய ஜெ.ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி அப்போது எங்கு இருந்தார்? அதன் பிறகு ஜெ.ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது?
டீக்கடை, பெட்டிக்கடை, சலூன் கடை, அடகு கடைகளில் எல்லாம் கண்காணிப்பு கேமரா (CCTV cameras – closed-circuit television) வைக்க சொல்லி வற்புறுத்தும், நமது தமிழ்நாடு காவல்துறை, ஜெ.ஜெயலலிதாவின் வீட்டிலும், அப்போலோ மருத்துவமனையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தாமல் இருந்ததை பொறுத்துக் கொண்டா இருந்திருக்கும்?
ஜெ.ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கைகளும், வீடியோ ஆதாரங்களும் இருப்பதாக தஞ்சாவூரில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில் சசிகலாவின் கணவர் நடராஜன் பகிரங்கமாக அறிவித்தாரே?
தற்போது அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கிளனெக்ளஸ் குளோபல் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதே!
அப்படியானால், அந்த ஆவணங்கள் எல்லாம் தற்போது யாரிடம் உள்ளது?
இப்படி ஏராளமான கேள்விகள்….? மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதற்கெல்லாம் உரிய பதில் கிடைக்குமா?
விசாரணை ஆணையம் தான் விடைச்சொல்ல வேண்டும்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
ஜெ.ஜெயலலிதா மரணம்!- விசாரணை ஆணையம் விடைச் சொல்லுமா?
News
September 25, 2017 11:45 pm