பட்டா வழங்காத வருவாய்துறை அதிகாரிகளை கண்டித்து, திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலக வாசலில்  கணவன், மனைவி போராட்டம்!

S3950001S3950013

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டு ஊராட்சியை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் சத்தியமூர்த்தி. இவர்களுக்கு சொந்தமான 1344 சதுர அடி காலி வீட்டு மனையை, தமிழ்செல்வி என்பவர் பத்திர பதிவு செய்து உரிமைக் கொண்டாடி வந்ததையடுத்து, இரு குடும்பத்தாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கான வருவாய்துறை ஆவணங்கள் அனைத்தும் சத்தியமூர்த்திக்கு சாதகமாக இருந்ததால், அந்த காலி வீட்டு மனைக்கு பட்டா வழங்கும்படி திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், பட்டா  வழங்காமல் வருவாய்துறை அதிகாரிகள் காலம் கடத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சத்தியமூர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வருவாய் துறை நில அளவை பதிவேட்டில் உள்ளபடி பட்டா வழங்கும்படி நீதிமன்றம் உத்ரவிட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஆகியோரிடம் பட்டா வழங்கும் படி சத்தியமூர்த்தி பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், அவருக்கு பட்டா வழங்காமல் இழுக்கடித்தனர்.

இந்நிலையில், இன்று காலை திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி மலர்கொடி ஆகியோர் வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இந்த இடம் சம்பந்தமாக இருதரப்பினருக்கும் வருவாய் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படும் என, திருவெறும்பூர் வட்டாட்சியர் சோபா தற்போது தெரிவித்துள்ளார்.

-ஆர்.சிராசுதீன்.