“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பாவின்படி, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவிற்கு வழியனுப்பும் நிகழ்வும், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு வரவேற்பு நிகழ்வும் இன்று ஒரே நாளில் நடைபெற்று இருக்கிறது.
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விமான நிலையம் வரை சென்று இன்று காலை வழியனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் சென்னை வந்தார். அவரை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, சபாநாயகர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், அமைச்சர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் பூ கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது புதிய ஆளுநருக்கு, வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதனை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.
நாளை ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ், கடந்த ஆண்டு அதாவது 02.09.2016 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் தமிழக ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தமிழக ஆளுநர் பொறுப்பை ஏற்பதற்காக 02.09.2016 அன்று காலை 11 மணிக்கு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த வித்யாசாகர் ராவை, விமான நிலையத்திற்கே சென்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மலர் கொத்துகொடுத்து வரவேற்றார்.
மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே. பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், டி.ஜி.பி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் அன்று வித்யாசாகர் ராவிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான நிலைய வாசலில் வித்யாசாகர் ராவிற்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் வித்யாசாகர் ராவை, மோட்டார் சைக்கிள் வீரர்கள்அணிவகுப்புடன் கிண்டியில் உள்ள மாளிகைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் ஓய்வு எடுத்தார். அன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்த பதவியேற்பு விழாவிலும் ஜெ.ஜெயலலிதா கலந்துக்கொண்டார்.
வித்யாசாகர் ராவுக்கு, அப்போதைய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அன்று ஆளுநருக்கான அனைத்து கௌரவங்களையும், மதிப்பு, மரியாதைகளையும் அளித்து, ஒரு முதலமைச்சருக்கே உரித்தான அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்த அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று நம்மோடு உயிரோடு இல்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் கனக்கிறது.
ஆம், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்ற 20 -வது நாள், அதாவது 22.09.2016 அன்று தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா மர்மமான முறையில் அப்போல்லோ மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால், 05.12.2016 அன்று மரணமடைந்ததாக தகவல் வெளியாகிது. ஆக இடைப்பட்ட 75 நாட்கள் அப்போல்லோ மருத்துவமனையில் அரங்கேற்றப்பட்ட அனைத்து சம்பவங்களையும், நாடகங்களையும், கேலி கூத்துக்களையும்… வித்யாசாகர் ராவ் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தாரே தவிர, ஆளுநர் என்ற தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெ.ஜெயலலிதாவை நேரடியாக பார்ப்பதற்கோ, ஜெ.ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த உண்மையான விபரங்களை நாட்டு மக்களிடம் எடுத்துரைப்பதற்கோ வித்யாசாகர் ராவ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்த்தில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், அதே மாநிலத்தின் முதன்மை அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவை பாதுக்காக்க தவறி விட்டார். வித்யாசாகர் ராவ் விழிப்பாக இருந்திருந்தால், ஜெ.ஜெயலலிதாவிற்கு இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டே இருக்காது.
ஒரு வேளை தமிழ்நாட்டின் ஆளுநராக ரோசய்யா தொடர்ந்து நீடித்து இருந்திருந்தால், ஜெ.ஜெயலலிதாவிற்கு இது போன்ற கொடுமை நடந்து இருக்காதோ?- என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com