பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இந்திய பிரிவாக, இந்திய விமானப்படை 8 அக்டோபர் 1932 அன்று தொடங்கப்பட்டது. 1933-ல் நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை தொடங்கியது. இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.
இந்திய விடுதலைக்கு பின் விமானப் படை இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 -ஆம் தேதி இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. புவியியல் ரீதியாக விமானப்படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
இந்திய விமானப் படை “இராயல்” என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டது. ஆனால், 10-ல் மூன்று படையணிப்பிரிவு பாகிஸ்தான் எல்லையினுள் அமைந்திருந்ததால், அவை ராயல் பாகிஸ்தான் விமானப்படைக்கு வழங்கப்பட்டன.
இந்திய விமானப்படையை அங்கீகரிக்கும் வகையில் 1945-ல் ஆறாம் ஜார்ஜ் மன்னர் “இராயல்” என்ற சொல்லை இந்திய விமானப்படைக்கு முன்னால் வைக்க அறிவித்தார். ஆனால், 1950-ல் இந்தியா குடியரசானபோது அந்த “இராயல்” என்ற வார்த்தை கைவிடப்பட்டது.
இந்திய விமானப் படை, முப்படைகளின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. ஆயுதப்படைச் சட்டம் 1947- இந்திய அரசியலமைப்பு மற்றும் வான்படைச் சட்டம் 1950- ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் வான் எல்லையை பாதுகாப்பதே இதன் தலையாய கடமையாகும். எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து இந்தியாவை பாதுக்காப்பதும், எதிரிகளின் மீது வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துவதும், இந்திய விமானப் படையின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்திய விமானப் படையில் சுமார் 170,000 வீரர்கள் நாட்டிற்காக சேவை செய்து வருகின்றனர், சுமார் 1,130 போர் விமானங்களும், மற்ற பயன்பாட்டுக்காக 1,700 விமானங்களும் இந்திய விமானப் படையில் உள்ளன. இந்திய விமானப் படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. அண்மைய காலத்தில் இந்திய விமானப் படையில் பெரிய அளவிலான நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்படி வரலாற்று சிறப்பு மிக்க நமது வான்படைக்கு, இன்று 85 -வது ஆண்டு தினம். இந்திய விமானப்படையின் 85- வது ஆண்டு விழாவையொட்டி, இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்திய விமானப்படை வீரர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்கள் சாகச பயிற்சியில் ஈடுபட்டனர். இதுபோல் பல்வேறு விமானப்படை தளங்களிலும் விமானப்படை வீரர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படைக்குச் சொந்தமான, பழமையான, புதிய மற்றும் போர் விமானங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள விமான படை இல்லத்தில், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் குழுவாக படம் எடுத்துக்கொண்டனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com