இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கில்டன் (INS Kiltan) என்ற அதிநவீன நீர்மூழ்கி போர்க்கப்பலை, இந்திய கடற்படையில் ஒப்படைக்கும் பணி இன்று நடைப்பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற விழாவில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு, ஐஎன்எஸ் கில்டன் (INS Kiltan) நீர்மூழ்கி போர்க்கப்பலின் சேவையை துவக்கி வைத்து அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஐஎன்எஸ் கில்டன் இந்தியாவில் கட்டப்பட்ட மிக வலிமையான போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இக்கப்பல் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திட்டமிடப்பட்டு, 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதி சோதனைகள் செய்யப்பட்டது. இறுதியில் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதிக எடை கொண்ட ஆயுதங்கள், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட், 76 மி.மீ., காலிபர் நடுத்தர திறன் கொண்ட துப்பாக்கிகள், சிஐடபிள்யூஎஸ் திறன் கொண்ட தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் உட்பட பல நவீன வசதிகளை இந்த கில்டன் போர்க்கப்பல் கொண்டுள்ளது. முந்தைய போர் கப்பல்களை விட சுமார் 100 டன் குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 109 மீட்டர், அகலம் 14 மீட்டரும் ஆகும். கடலுக்கு அடியில் நீண்ட தொலைவில் வரும் சத்தத்தையும் எளிதில் கண்டு பிடிக்கும் அதிநவீன கருவிகள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கில்டன் போர்க்கப்பல் ஏவுகணையை தடுக்கும், ராக்கெட்களையும் ஏவக் கூடிய திறன் படைத்தது. கார்பன் பைபர் கூட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் போர்ப்பல் இது என்ற பெருமையைும் பெற்றுள்ளது. குறைந்த எடை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்டது.
இந்த கில்டன் போர்க்கப்பல் முற்றிலும் இந்திய கடற்படை இயக்குனரகம் மற்றும் ஆராய்ச்சி பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பலில் 13 அதிகாரிகள் 178 வீரர்கள் பணிபுரிய உள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com