பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மகளிரணி மாநில செயலாளரும் மற்றும் செய்தி தொடர்பாளருமான டாக்டர் ஜெமிலா அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன்.
பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழக பாஜகவின் கொள்கைகள் எழுத்தளவிலும், செயல்களில் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது.
என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன்.
எனவே, இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ஜெமிலா தெரிவித்துள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.