திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் 2017-ம் ஆண்டின் கலை விழாவின் துவக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சியானது பல்கலைகழக அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் மஞ்சுளா தலைமை வகித்தார்.
விழா அறிமுக உரையை பேராசிரியர் பழனிசாமி நிகழ்த்தினார். இதில் பாரதிதாசன் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட 25 கல்லூரிகளில் இருந்து வருகை புரிந்த மாணவர்கள் தமிழக மரபு கலை பண்பாடுகளை குறிக்கும் வகையில் தங்களை அலங்கரித்து தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்ட ஆட்டங்களை ஆடி தங்களது கலை திறமை வெளிபடுத்தினர். மேலும், பழங்கால இசை கருவிகளை இசைத்தனர்.
சில மாணவ, மாணவிகள் கடவுள்களாக தங்களை அலங்கரித்து நடனமாடினர். பல்கலைகழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையே கலை திருவிழாவின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு பேரணி நடந்தது.
இதில் பல்கலைகழக பொறுப்பு பதிவாளர் பாபு ராசேந்திரன், நிகழ்கலை துறை தலைவர் பேராசிரியர் மதிவாணன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேகர், சோமசுந்தரம், ரவிசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக கலை விழா உயர்மட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜன் வரவேற்று பேசினார். இறுதியாக உயர் மட்ட குழு உறுப்பினர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.
-ஆர்.சிராசுதீன்.