தமிழக அரசு மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 10-ம் தேதி தண்ணீர் திறந்து விட்டது. இந்நிலையில், திருவெறும்பூர் பகுதியில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்காலை பொதுப்பணித்துறையினர் தூர்வாரவில்லை; இதனால் இதுவரை புதிய கட்டளை மேட்டு வாய்காலில் தண்ணீர் வரவில்லை. இதனால் துவாக்குடி, அசூர், பழங்கனாங்குடி, தேனீர்பட்டி, பொய்கைகுடி, அரவாக்குறிச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இதுநாள் வரை விவசாயப் பணிகளை தொடங்க முடியவில்லை.
மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களும் தூர்வாரப்படவில்லை; பொதுப்பணித்துறையினரின் இந்த அலட்சியப் போக்கை கண்டித்து, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், துவாக்குடி அருகே சாலை மறியலில் ஈடுப்பட முயன்ற தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம், திருவெறும்பூர் வருவாய் ஆய்வாளர் கீதா, திருவெறும்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சேகர் தலைமையிலான போலீசார் சமரசம் பேசினார்கள்.
அதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். சாலை மறியில் போராட்டத்தில் மாநில செயலாளர் விஸ்வநாதன் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.
-ஆர்.சிராசுதீன்.