ரூ.600 கோடி செலவில் திருமயம் பாய்லர் ஆலையை திறந்து வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு!

BHEL PM THIRUMAYAMதிருச்சியை அடுத்த திருமயத்தில் உள்ள பி.எச்.இ.எல்., நிறுவனத்தின் புதிய ஆலையைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று (02.08.2013)  முற்பகல் 11.05-க்கு சிறப்பு விமானத்தில், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவருக்கு தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செலவம், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சர் டி.பி.புனாச்சி, மக்களவை உறுப்பினர் பா. குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ  முரளி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தமிழக அரசின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், 11.10-க்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருமயம் புறப்பட்டுச் சென்றார்.

ரூ.600 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள புதிய பாய்லர் தொழிற்சாலையை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசும் போது கூறியதாவது:- புதுக்கோட்டை திருமயத்தில் பெல் நிறுவனத்தின் புதிய பாய்லர் தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். பெல் நிறுவனம் நமது பொது துறை நிறுவனங்களில் முக்கியமானதாக உள்ளது.

இது தொழில் வளர்ச்சியில் குறிப்பாக எரி சக்தி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்ட மத்திய நிதி மந்திரி சிதம்பரம், பெல் நிறுவன அதிகாரிகள் ஆகியோரை பாராட்டுகிறேன்.

இதன் மூலம் இப்பகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் இவர்கள் பாடுபட்டுள்ளனர். தொழில் வளர்ச்சியின்பால் அவர்கள் கொண்டுள்ள அக்கறையை இது காட்டுகிறது. நாட்டின் பின் தங்கிய பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அவர்களின் ஈடுபாட்டை காட்டுகிறது.

இந்த புதிய பாய்லர் ஆலை உற்பத்தி நிறுவனத்தால் இப்பகுதிக்கு பல நன்மைகள் கிடைக்கும். இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிறு தொழில் புரிவோர் மற்றும் சேவை நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். பயிற்சியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் திறன் மேம்பாடு வளர்ச்சி அடைந்து ஒட்டு மொத்த சமுதாயமும் வளர்ச்சி அடையும்.

திருமயம் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு ஏற்கனவே பல நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும். இதற்கு பெல் நிறுவனம் உறுதுணையாக உள்ளது. தொழில் உற்பத்தியில் நம் நாடு பல பணிகளை நிறைவேற்ற வேண்டி உள்ளது. மொத்த தொழில் வளர்ச்சியை பெருக்கும் கட்டத்தில் உள்ளோம். அதற்கு பெல் நிறுவனம் உறுதுணையாக உள்ளது.

தற்போது மின் பற்றாக் குறையையும் பொருளாதார தேவையையும் சமாளிக்க புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. 12–வது ஐந்தாண்டு திட்டத்தில் இந்தியாவில் 1 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11–வது ஐந்தாண்டு திட்டத்தில் 55 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்பட்டது. இது 10–வது ஐந்தாண்டு மின் உற்பத்தி இலக்கை விட 50 சதவீதம் கூடுதல் ஆகும். நமது நாட்டின் வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

பெல் நிறுவனம் உற்பத்தி நமது நாட்டின் உற்பத்தி திறனை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இது 3 லட்சம் ஏக்கரில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இது 2–வது மிகப்பெரிய நிறுவனம் என்பதில் பெருமையாகும்.

புவி வெப்பமயமாதலில் உலக அளவில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இதில் இந்தியாவும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மின் உற்பத்தியில் 50 சதவீதம் நிலக்கரியை பயன்படுத்துவதால் புவி வெப்ப மயமாதல் ஏற்படுகிறது. ஜவஹர் லால் நேரு திட்டத்தின் கீழ் சூரிய சக்தியியை பயன்படுத்தி 13–வது ஐந்தாண்டு திட்டத்தில் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்து. இதனால் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் எரி சக்தி திறன் மேம்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மின் உற்பத்தி சூரிய சக்தி தொழில் வளர்ச்சியில் பெல் நிறுவனம் முன்னணியில் விளங்குகிறது. இது சிறந்ததாகும். இதன் மூலம் தமிழ்நாடு புதுக்கோட்டை, திருமயம் பகுதி மக்களுக்கு எதிர்காலம் இனிதாக அமையும்.

தற்போது தமிழ்நாடு முன்னனி மாநிலமாக உள்ளது. இதற்கு பெல் நிறுவனம் காரணமாகும். மேலும் அனைத்து துறைகளில் தமிழகம் வளர்ச்சி அடைய எனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 



 

Leave a Reply