இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள்! -வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்; அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…! -சிறப்புக் கட்டுரை.

இரும்பு பெண்மணி இந்திரா காந்தி.

இரும்பு பெண்மணி இந்திரா காந்தி.

இந்தியாவின்இரும்பு பெண்மணிஎன்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இந்திராகாந்தி, இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். இவர், இந்தியாவின் முதல் பிரதமரான  பண்டித ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் நாள் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே மகளாக இந்திரா பிறந்தார்.

இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு, இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வ வளம் மிக்க வழக்கறிஞர் ஆவார்மகாத்மா காந்திக்கு முந்தைய காலத்தில், இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.

இந்திராவின் தந்தை  ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்திருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார்.

இந்திராவின் அன்னை கமலா காச நோயாளி என்பதால், ஜவஹர்லால் நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகியே இருந்தார்,

ஆனால், தமது தாய் கமலாவின் முழு கவனிப்பில் தான் இந்திரா காந்தி வளர்ந்தார். இந்திரா தன் தாயின் மூலம் வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார்.

இந்திராவின் தாத்தா மோதிலால் நேருவும், தந்தை ஜவஹர்லால் நேருவும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்று கலந்தது. 

விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது.

1936-ல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர்இறுதியாக காசநோயால் மரணமடைந்தார். அப்போது இந்திராவிற்கு வயது 18.

இந்திரா தனது இளமைப்பருவத்தில் மற்ற பெண் பிள்ளைகளைப் போல எந்த ஒரு சந்தோசத்தையும் அவர் அனுபவிக்கவில்லை.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அதாவது 1930-களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார்.

1940-களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர, இந்திரா சுவிட்சர்லாந்தில், வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார்.

இந்திரா குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, அப்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் இந்திரா தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார். 

ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில்அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார். பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது.

இந்திரா மற்றும் பெரோஸ் இந்தியாவிற்கு திரும்பிய போதுஅவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள். இவ்வளவு விரைவாக இந்திரா திருமணம் செய்து கொள்வதை, ஜவஹர்லால் நேரு விரும்பவில்லை. மேலும், அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இந்திரா மிகவும் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்1942 மார்ச்சில் இந்திராவுக்கும், பெரோசுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

அதுவரை இந்திரா பிரியதர்சினி நேரு என்று அழைக்கப்பட்ட இவர், பெரோசுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

பெரோசும், இந்திராவும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942-ல் “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள். 

சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ், உத்திர பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்களுக்கு ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், கருத்து வேறுபாடுகளால் 1958 வரை பெரோசும், இந்திராவும் பிரிந்து வாழ்ந்தார்கள்.

பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டும் இணைந்தது. ஆனால், 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார்.

இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து, சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர், ஜனவரி 19, 1966-ல், இந்தியாவின் பிரதம மந்திரியாகப் இந்திரா காந்தி பதவியேற்றார். இவர், மார்ச் 24, 1977 வரை அப்பதவியில் இருந்தார்.

1977-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர், மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர், 1984 -ல் கொலை செய்யப்படும் வரை இந்திய பிரதமராக பதவியில் இருந்தார்.

ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக, வலுவான அதிகார பலத்துடன் மிக உயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, தனது பலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார்இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார்.

இதன் ஒரு அங்கமாக 1969 –ல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது.

இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.

1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால், கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து “வங்காளதேசம்” என்ற தனி நாடாகியது.

1975 –ல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352-வது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம், எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை, இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை தவறாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந்தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார்.

இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.

எனினும், இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் அந்த  ஆட்சி மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது.

இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முந்தைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.

எனினும், இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி, தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கி காலமானார்.

சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு, இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா காந்தி படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார்.

சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது.

இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984-ல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

எனினும் வாழுகின்ற மக்களுக்கும், வருங்காலத் தலைவர்களுக்கும். “இரும்பு பெண்மணி” இந்திரா காந்தியின் வாழ்க்கை மிகப் பெரிய வரலாற்று பாடமாக அமைந்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com