கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து, திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

IMG-20171205-WA0033 Cloud 4G Star_20171205_110658

திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தில் அதன் கட்டுபாட்டிலும், கோவை நீலவேணி தயாராம்மாள் டிரஸ்ட்டின் நிர்வாகத்தின் கீழும் பெல் (BHEL) மெட்ரிக்குலேசன் மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சமச்சீர் கல்வி திட்டத்தின் அடிப்படையில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு கல்வி கட்டணம் தொடர்பாக பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்,  பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து திருவெறும்பூர் வட்டாட்சியர், கல்வி துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகம் தரப்பில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில்  அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வாங்க மாட்டோம் என எழுத்து பூர்வமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2017-2018-ம் ஆண்டு கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் செலுத்திய பெற்றோர்களுக்கு, இரண்டாம் பருவ கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

குறிப்பாக 3-வகுப்பிற்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூபாய் 5500 ஆகும், ஆனால், பள்ளி நிர்வாகமோ முதல் தவணையாக ரூபாய் 10 ஆயிரத்து 640-ம், இரண்டாம் தவணையாக ரூபாய் 6 ஆயிரத்து 40 வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது, அதற்கு பள்ளி நிர்வாகம் உங்களுக்கு எந்த பள்ளி வசதியாக இருக்கிறதோ அந்த பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று பதிலளித்தாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள், முதல்வர் தனிபிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் வட்டாட்சியர் ஆகியோரிடம் பதிவு தபாலில் மனு அளித்துள்ளனர்.

இதில் எவ்வித நடவடிக்கை இல்லாததால் நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து  வட்டாட்சியரிடம் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்தனர். புகாரை மனுவை விசாரித்த வட்டாட்சியர் ஷோபா, வரும் வெள்ளிக்கிழமை கல்வி துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளித்தப்பின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

-ஆர்.சிராசுதீன்.