தமிழக ஆளுநரிடம் தமிழக எதிர் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மனு!-முழு விபரம்.

M.K STALIN MEET TN.GOVRNORM.K STALIN MEET TN.GOVRNOR P-1 M.K STALIN MEET TN.GOVRNOR P-2 M.K STALIN MEET TN.GOVRNOR P-3

மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு,

வணக்கம்.

கடந்த 29 நவம்பர் 2017 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கிய ஒகி புயலின் வரலாறு காணாத பேரிடர் பாதிப்புகள் குறித்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் நேரடியாகவே அறிந்திருப்பீர்கள். மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மற்றும் மீனவ சமுதாயத்தினரின் கதறல் குரல் கேட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் நேரில் சென்று, துயரத்தில் வாடும் மக்களை சந்தித்துப் பேசினேன். மேலும், பொறுப்பற்ற முறையில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் மந்தமாக நடைபெறுவதை கண்ணுற்று மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நான் சேகரித்த முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், இந்த மோசமான புயலில் இருந்து மக்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாக்க மாநில நிர்வாகம் முற்றிலும் தவறியிருக்கிறது என்பதே என்னுடைய கள மதிப்பீடாகும்.

எனவே, காணாமல் போன மீனவர்களை மீட்பதில் மாநில அரசின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலும், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்து மாண்புமிகு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடந்த 04.12.2017 அன்று கடிதம் எழுதினேன். அப்போது, “கன்னியாகுமரி மாவட்டத்தைதேசிய பேரிடர்மாவட்டமாக அறிவித்து, அவரது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்துப் படைகளையும் முடுக்கி விட்டு, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அந்தப் பணிகளை அவரே நேரடியாக கண்காணிக்க வேண்டும்”, என்றும் மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். 

மாநிலத்தின் முதலமைச்சரோ, இந்த துயரமான பேரிடர் குறித்தும், இன்னல்களுக்கு உள்ளான மக்கள் பற்றியும் துளியும் கவலைப்படாமல், நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களிலும், இடைத்தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். பேரிடர் நேரத்திலும் விழாக்களுக்குத்தான் அவர் முன்னுரிமை அளிக்கிறார். இந்நிலையில் தலைமைச் செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர், துணை முதல்வர், முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரது முரண்பட்ட அறிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கனிவான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த முரண்பாடான தகவல்கள், அரசு நிர்வாகம் முற்றிலுமாக தோல்வியடைந்திருப்பதையே உணர்த்துகிறது.

மாநிலத்தில் 97 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாக அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் இந்திய அரசாங்கத்துக்கு முதலில் தகவல் தெரிவித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலாளரின் கூற்றை உறுதிப்படுத்தி விட்டு, 2,124 மீனவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரைகளில், சிக்கித் தவிப்பதாக குறிப்பிட்டார். துணை முதலமைச்சர் அவருடைய பங்கிற்கு இந்த எண்ணிக்கையை 2,384 மீனவர்கள் என அதிகரித்துக் கூறியதன் மூலம், ஒட்டுமொத்த மீனவ சமுதாய மக்கள் மனதிலும் பீதியை ஏற்படுத்தினார். 04.12.2017 அன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 2,570 மீனவர்கள் என்று ஒரு கணக்கை வெளியிட்டார்.

ஆனால், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள திரு. டி.கே.ராமச்சந்திரன் ..எஸ். அவர்களோ, கடற்கரையோரங்களில் தவிக்கும் மீனவர்கள் எண்ணிக்கை 3,117 என்று அறிவித்தார். காணாமல் போன மீனவர்கள் எண்ணிக்கை 554 என்று கூறிய முதலமைச்சர் 260 மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டார். தற்போது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரோ, “623 மீனவர்கள் காணவில்லை”, என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக, காணாமல் போன மீனவர்கள் பற்றியோ அல்லது பல்வேறு கடற்கரைகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் பற்றியோ உண்மையான, சரியான விவரங்கள் ஏதும் தமிழக அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது.

கடந்த டிசம்பர் 7 ஆம் தேதியன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் பற்றிய எண்ணிக்கையை குறிப்பிடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான ஆயிரக்கணக்கான மீனவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலை நீடிப்பது மீனவ மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

எனவே, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து மீட்பதற்கு, மத்திய அரசின் தலையீடு உடனடியாக தேவைப்படுகிறது. மாநில அரசோடு இணைந்து மீனவர்களை தேடும் பணியில் மத்திய அரசு ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்தி்ய மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல் மற்றும் கடலோரப் படையினர், கடல் எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மனிதாபிமான அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள நிலைமையைப் பார்க்கும்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மனித நேயமே வெளிப்படவில்லை என்பதால், தேடுதல் பணிகளின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பதோடு, பணிகள் திருப்திகரமாகவும் இல்லை என்பதே உண்மை. ஒகி புயல் தாக்கி 15 நாள்கள் ஆன பிறகும்கூட, காணாமல் போன மீனவர்கள் மற்றும் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் பற்றிய சரியான புள்ளி விவரங்களை மத்திய மாநில அரசுகள் தெளிவாக அறிவிக்காதது, குமரி மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள பெரும் திரளான மீனவ மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தி அறவழிப் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த மீனவ மக்களின் சார்பில் தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள், தற்போது நிலவி வரும் பிரச்னைகளின் தீவிரத் தன்மையையும், முக்கியத்துவத்தையும் உரக்கச் சொல்பவையாக அமைந்துள்ளன. அரசியல் சட்டப்படி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்ட ஒரு முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி என்பதால், தமிழகத்தில் இதுபோன்ற பேரிடர்களை கையாண்ட முன் அனுபவமும், திறமையும் உள்ள தகுதியான அதிகாரிகள் இருந்தும், மீனவர்களை மீட்கும் பணியில் இந்த அரசு படுதோல்வி அடைந்து விட்டது.

இந்திய கப்பற்படையுடன் உரியமுறையில் ஒருங்கிணைந்து செயல்படாமல் போனதன் மூலம், உரிய நேரத்தில் உடனடியாக செயல்படுவதை தவறவிட்ட தமிழ்நாடு அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்து நிற்கிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் தொடர்வதால், மாநில நிர்வாகத்தில் இதுபோன்ற பேரிடர் நேரங்களில் கூட பல குழப்பங்களும், பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

அரசு நிர்வாகத்தின் வழக்கமான செயல்பாடுகள் கூட முழுமையாக செயலிழந்து நிற்பதால், மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மீட்புப் பணிகளில் உரிய கவனம் செலுத்தப்படாமல், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில்லாத ஒரு மெத்தனப்போக்கு இந்த ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கிறது.

எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை கையாண்டு, மத்திய அரசினை வலியுறுத்தி, ஆழ்கடலில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்கும் வகையில், கப்பற் படையின் சார்பில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களை பயன்படுத்தி, மிகப்பெரிய தேடுதல் வேட்டையை முழு வீச்சில் தொடங்கிட உதவிட வேண்டும். பொதுமக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, அவர்களை பாதுகாக்கும் அரசியல்சட்ட கடமையிலிருந்தும், ஜனநாயகரீதியிலான பொறுப்பிலிருந்தும் தவறிவிட்ட நிலையில் மாநிலத்தில் உள்ள அரசு இருப்பதால், களத்தில் உள்ள மிக மோசமான நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரியப்படுத்தி, ‘ஒகி புயல்பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரி மாவட்டத்தைதேசிய பேரிடர்மாவட்டமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,

(மு..ஸ்டாலின்)

-கே.பி.சுகுமார்.