திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் சார்பாக ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
டெல்டா மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். பின்பு மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை வாபஸ்பெற வலியுறுத்தி விவசாயிகள் காரசாரமாக விவாதித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமாதானமாக பேசியும் அதை ஏற்க்காமல் ஒரு அணியினர் தரையில் அமர்ந்து தமிழக அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
இந்த நிகழ்வில் விவசாய அணிகளுக்கு இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி எந்தவித பலனும் இன்றி தடைபட்டது.
இந்த நிகழ்வில் வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அனைத்து நிர்வாக அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-ஜி.ரவிசந்திரன்.
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு விவகாரம்: முதலமைச்சர் கே.பழனிச்சாமி நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்!
News
December 28, 2017 7:54 pm